இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அரச பங்காளிக்கட்சியாக இருந்தாலும் – எமது மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் ஒருபோதும் மௌனம் காத்தது கிடையாது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளருமான மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ் வளாகத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் புதிய உறுப்பினர்கள் புதிதாக பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இது எமக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மிக சிறப்பாக நடைபெற்றது
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அரச பங்காளிக்கட்சியாக இருந்தாலும் – எமது மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் ஒருபோதும் மௌனம் காத்தது கிடையாது. எனவே, காங்கிரஸை நம்புங்கள். அந்த அமைப்பு உங்களை ஒருபோதும் கைவிடாது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வளர்ச்சிக்கு பலர் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். காங்கிரஸில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவு அங்கத்தவர்களாக உள்ளனர். இம்முறை தேசிய சபையில் இளைஞர்களும், பெண்களும் முன்னுரிமை வழங்கப்பட்டு பதவிகள் வழங்கப்பட்டது.
காங்கிரசுக்கு சோதனை வந்த காலக்கட்டங்களில் எல்லாம் நீங்கள் எமக்கு பக்க பலமாக இருந்துள்ளீர்கள். இனியும் இருப்பீர்கள். நாமும் உங்களை கைவிடமாட்டோம்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, விலைவாசி உயர்ந்துள்ளது. இவை பற்றி காங்கிரஸ் கதைப்பதில்லை என சிலர் விமர்சிக்கின்றனர். நாம் அரச பங்காளிகளாக இருந்தாலும், மக்களுக்கு பிரச்சினை என்றால் மௌனம் காக்கமாட்டோம்” என்றார்.