சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை மனித உரிமை மீறலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என உறுதிப்படுத்தாமல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியமை மனித உரிமை மீறல் நடவடிக்கை எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, நாள் முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியமை மற்றும் சமூக வலைத்தள ஊடகங்களுக்கு தடையேற்படுத்தியமை ஆகியன காரணமாக அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திய மேலும் அதிகரிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை தெரிவிக்க நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டங்கள் அரசியல் கட்சிகளின் வழிநடத்தல் இன்றி நடத்தப்படவிருந்தன.
இந்தநிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த மக்களுக்கு இருந்த உரிமை ஊரடங்குச் சட்டம் மற்றும் சமூக வலைத்தள தடை என்பன காரணமாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
இது மக்களுக்கு இருந்த கஷ்டங்களை மேலும் அதிகரிக்க செய்துள்ளதுடன் மக்கள் மத்தியில் காணப்படும் இந்த அழுத்தம் வெடித்து சிதறினால், அது நாட்டுக்கு நன்மை தரும் நிலைமையாக இருக்காது எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.