மட்டக்களப்பில் இளைஞர்களை உசுப்பேற்றி கட்சி மோதல்களை தூண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ராஜபுத்திரன் திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வியெழுந்துள்ளது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேசிய ரீதியாக மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை முன்வைத்து மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வேளையில் மக்களின் பிரச்சினையில் அரசியல் குளிர்காயும் குள்ள நோக்கோடு தனது தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக எரிகிற வீட்டில் புடுங்கியது இலாபமென தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டு வருவது வேடிக்கைக்கும் வேதனைக்குமுரியது
அந்த வகையில் இளைஞர்களை உசுப்பேற்றி மட்டக்களப்பில் கட்சி மோதல்களை தூண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ராஜபுத்திரன் திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வியெழுந்துள்ளது
இதன் முதல் கட்டமாக அரசுக்கு எதிரான போராட்டம் எனும் பெயரில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக்காரியாலத்தின் முன்னால்நேற்று மாலை ( திங்கட்கிழமை) மேற்கொண்ட மிக மோசமான தான்தோன்றித்தனமான செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு மக்கள் சுமூக வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் கட்சியும் மிக உறுதியாக இருக்கின்றதுஎன்பதனை மக்கள் நன்கு உணர்வார்கள்.
இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கையினைக் குழப்பி தமிழ் இளைஞர்கள் மத்தியில் அரசியல் அநாகரீகமான செயற்பாடுகளை தூண்டி மோதல்களை ஏற்படுத்த முனையும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ராஜபுத்திரன் போன்றோரது சூட்சுமங்களை புரிந்துகொண்டு ஆத்திரமூட்டல்களுக்கு இடம் கொடுக்காமல் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் அனைவரும் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அத்தோடு இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை கணக்கிற்கொள்ளாது 65000க்கு மேல் வாக்களித்து மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு அமைய தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தூரநோக்கு சிந்தனையின்பால் கிழக்கு தமிழரின் இருப்புக்காக கண்ணும் கருத்துமாக செயற்படுமாறும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்.” என தெரிவிவித்துள்ளார்.