அண்மையில் பதவி விலகிய அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை மீள ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் நெருக்கடிகளையடுத்து, கடந்த 3 ஆம் திகதி அமைச்சரவை பதவி விலகியது.
பின்னர், சில அமைச்சுப் பதவிகள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் வெற்றிடமாக இருந்த நிதியமைச்சர் பதவிக்கு முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி நியமிக்கப்பட்டார்.
எனினும், அலி சப்ரி 24 மணித்தியாலங்களுக்குள் அப்பதவியிலிருந்து விலகியதையடுத்து, புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் பதவி விலகிய அமைச்சர்கள் அனைவரும் இதுவரை தங்களது உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர்கள், நேற்றையதினம் நாடாளுமன்ற அமர்வுக்கு அமைச்சின் வாகனங்களை பயன்படுத்தி வருகைதந்தாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் சபையில் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக பிள்ளையான் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் வாகனத்தில் வருகை தந்தார் என்றும் அவர் குற்றம் சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.