உக்ரைனின் புச்சா நகரில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பாக ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன.
முதற்கட்டமாக, இந்தப் படுகொலைகளுக்கான எதிரப்பை பதிவு செய்யும் வகையில், தங்கள் நாடுகளிலிருந்து ரஷ்யத் தூதரக அதிகாரிகள் சிலரை வெளியேறுமாறு பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உத்தவிட்டுள்ளன.
ஐரோப்பிய ஆணையத்தின் 27 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸிலுள்ள தலைமையகத்தில் கூடி, ரஷ்யா மீது ஐந்தாவது கட்ட பொருளாதாரத் தடைகளுக்கான பரிந்துரைகளுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தனர்.
இந்தப் பரிந்துரையில், ரஷ்யாவில் புதிதாக முதலீடு செய்வதற்கு முழுமையான தடை விதிப்பது, ரஷ்யாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
புதிய பொருளாதாரத் தடைகளில் ரஷிய நிதி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள் மீது இன்னும் கடுமையான தடை விதிப்பது, ரஷ்ய அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துகளை முடக்கி அவர்களுக்கு பயணத் தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கூடுதல் பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக, ரஷ்யாவிலிருந்து ஆண்டுக்கு 400 யூரோக்கள் மதிப்பிலான பொருள்களின் இறக்குமதிக்குத் தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
புச்சாவின் வீதிகளில் மணிக்கட்டு கட்டப்பட்ட நிலையில் குறைந்தது 20பேரின் இறந்த உடல்களை காட்டும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. எனினும், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை ரஷ்யா மறுத்துள்ளது.