ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் மேலதிக வரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் இன்று (வியாழக்கிழமை) வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
2000 மில்லியன் ரூபாய்க்கு அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு 25 சதவீத மேலதிக வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்தது.
அதன்படி ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் 25 சதவீத மேலதிக வரி தொடர்பான குறித்த சட்டமூலத்திற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியிருந்தது.
இதனை அடுத்து குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தன.
இருப்பினும் மேலதிக வரிச் சட்டமூலத்தில் EPF, ETF உட்பட 13 நிதியங்கள் உள்ளடக்கப்படாத வகையில் திருத்தம் செய்யப்படும் என சட்டமா அதிபர் உறுதியளித்திருந்தார்.
இதனை அடுத்து மேலதிக வரிச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.