மலர்ந்துள்ள இந்த ஸ்ரீசுபகிருது வருடம் அனைத்து மக்களுக்கும் செழிப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமாக அமையட்டும் என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஒரு புதிய வருடத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் இவ்வருடமானது மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பினையும் கொண்டு வருகிற ஆண்டாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
கடந்த வருடத்தில் நாம் கற்றுக்கொண்ட சாதக, பாதக விடயங்களை இந்த ஆண்டின் படிப்பினைகளாக கொண்டு எமது வாழ்வினை வளப்படுத்திக்கொள்வதற்கு பயனாக்கிக் கொள்ளும் அதேவேளை மற்றவர்களின் வாழ்விலும் நன்மையை கொண்டுவருமுகமாகவும் பயன்படுத்திக் கொள்வோமாக.
மேலும் சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வு இந்த புதிய வருடத்தில் கிடைத்திட வேண்டும் என நான் பிரார்த்தனை செய்கிறேன்.
நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் பிரிக்க முடியாத பிளவுபடாத ஒருமித்த நாட்டிற்குள் ஒற்றுமையாகவும்,நல்லிணக்கத்துடனும் இருந்திட இப் புத்தாண்திலிருந்து அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள் மற்றும் மக்கள் ஆகிய நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
அனைவருக்கும் இனிய தமிழ், சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.“ என குறிப்பிட்டுள்ளார்.