உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் உறுப்பினர்களை வளைத்துபோடும் சில்லறைத்தனமான அரசியலை தனது சகாக்கள் ஊடாக பஸில் ராஜபக்ச மேற்கொண்டுள்ளார்.
எமது உறுப்பினர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்று பேரம் பேசுகின்றனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதியுடன் எப்படி பேச்சு நடத்துவது?
உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு இளைஞர்கள் இடமளிக்கமாட்டார்கள். தக்க பாடம் புகட்டுவார்கள்.
எனவே, சாந்த பண்டாரவிடமிருந்து அமைச்சு பதவியை ஜனாதிபதி உடன் பறித்து, அவரை அரசியல் ரீதியில் அநாதையாக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் மட்டும்தான் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் பேச்சுக்கு தயாரில்லை. எமது பலத்தை நாம் காட்டுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.