பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று ஐனாதிபதி பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ராஜபக்ஷ இருட்டு அகன்று போக வேண்டும். இனமதமொழி வேறுபாடின்றி ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.
அந்தவகையில் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுவரும் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை வழங்குகிறோம். போராட்டத்தில் அரசியல் கலப்பு வேண்டாமென போராட்டாரர்கள் விரும்புகிறார்கள்.
வடக்கு கிழக்கில் பலர் கலந்து கொள்ள வேண்டுமென விரும்புகின்றனர். புத்தாண்டு மலரும் வேளையில் போராட்டம் வெற்றி பெற வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிரான குற்றப்பிரேரணை, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைக்கு எதிரான சட்டத்திருத்தம் நிறைவேறினால் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படும்.“ எனத் தெரிவித்துள்ளார்.