காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 10ஆவது நாளாகவும் தொடர்கிறது.
குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர்.
அத்தோடு, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக போராட்டத்தின் மற்றொரு வடிவமாக நேற்றைய தினம் இரவு காலிமுகத்திடல் வளாகத்தில், போராட்டக் குழுக்களும் பொதுமக்களும் ஜனாதிபதி செயலகத்தின் முன்பக்க சுவர்களில் ஒளித்திரை (ப்ரொஜக்டர்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு ஆக்கபூர்வமான யோசனைகளை காட்சிப்படுத்தின.
‘Go Home Gota’ என்ற ஸ்லோகமும் ஜனாதிபதி செயலக கட்டடத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
அதேநேரம், ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் நேற்று வலியுறுத்தப்ட்டமை குறிப்பிடத்தக்கது.