கொரோனா கட்டுப்பாடு தொடர்பான நிபுணர் குழுவின் முடிவினைத் தொடர்ந்து கட்டாயமாக முகக்கவசம் அணிவதை தளர்த்துவதாக கூறிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, இந்த முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நேற்று பணிப்புரை விடுத்ததாக தெரிவித்தார்.
அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பொது போக்குவரத்து மற்றும் உள்ளக இடங்கள் தவிர மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிவதை நீக்குவது அரசியல் முடிவு அல்ல என்றும் பேராசிரியர் நீலிகா மாளவிகே போன்ற தொழில் வல்லுநர்களை உள்ளடக்கிய கொரோனா கட்டுப்பாட்டு நிபுணர் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
கொரோனா பரவல், புதிய கொரோனா நோயாளிகள் மற்றும் தற்போது கொரோனா காரணமாக பதிவான இறப்புகளின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
ஏப்ரல் 3ஆம் திகதி இந்த முடிவ எடுக்கப்பட்டதாகவும் புத்தாண்டுக்குப் பின்னர் முடிவை செயற்படுத்த அறிவுறுத்தியதாகவும் தெரிவித்த அவர், எனவே, தான் அமைச்சராகப் பொறுப்பேற்ற ஏப்ரல் 19ஆம் திகதி அது குறித்து அறிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
தான்தான் இந்த முடிவை எடுத்தேன் என்று சிலர் நினைத்தார்கள் என்றும் இது அரசியல் முடிவு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முகக்கவசம் அணிவதைத் தளர்த்தும் முடிவு சமூக ஊடகங்களிலும் சிலராலும் கேள்விக்குட்படுத்தப்பட்டதாகவும் அதன் விளைவாக அந்த முடிவை மீள்பரிசீலனை செய்து முடிவைத் தெரிவிக்குமாறு சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் மக்கள் விரும்பினால் இன்னும் முகக்கவசத்தை அணியலாம் என்றும் அவர் கூறினார்.