புதிய பொருளாதாரப் பாதையை காண்பிக்க ஏன் அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்ற ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது?
கடன் தொடர்பான பல்தரப்பு கலந்துரையாடல் ஏன் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை?
இந்தியா, சீனா, ஜப்பானுடன் அரசாங்கம் பேச்சு நடத்தியுள்ளதா? பணவீக்கத்தை குறைக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? உற்பத்திக் கைத்தொழிலை ஊக்குவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
விவசாயிகள், மீனவர்கள், மத்திய தரவர்க்கத்தினர் என அனைவரும் இன்று பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான நிவாரணம் என்ன?
இவற்றுக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும். நாட்டில் இன்று வறுமை நிலைமை மிகவும் மோசமாக ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியை வெளியேற வேண்டும் என மக்கள் கோரிவரும் நிலையில், ஒரு தரப்பினர் சென்று பிரதமர் தலைமையில் அரசாங்கத்தை முன்னெடுக்குமாறு தெரிவித்துள்ளனர். இவைதானா அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு?
ரம்புக்கனையில் போராடிய ஒருவரை அரசாங்கம் கொலை செய்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளும் இந்த அரசாங்கத்தில் தான் உள்ளார்கள். இந்த அரசாங்கம் ஒரு கொலைக்கார அரசாங்கமாகும்.
மக்களை தொடர்ந்தும் ஏமாற்றவா இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது? இவற்றுக்கு எல்லாம் அரசாங்கம் பதில் கூற வேண்டும்.“ எனக் குறிப்பிட்டிருந்தார்.
சஜித் பிரேமதாஸ இவ்வாறு உரையாற்றியபோது, குறுக்கிட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, நாளாந்த சபை நடவடிக்கைகளை கொண்டு செல்ல ஒத்துழைப்பினை வழங்குமாறு கோரினார்.
மேலும், நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்து, சபையை கேலிக்குள்ளாக்க வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித்தலைவரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
எனினும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா தொடர்ந்தும் அரசாங்கத்தை விமர்சித்து உரையாற்றிக் கொண்டிருந்தமையால் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதனையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எழுந்துநின்று ஆளும் தரப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன்போது சபாநாயகர், உறுப்பினர்கள் அமைதியாக இருந்து தனக்கு ஒத்துழைப்பினை வழங்குமாறு கோரிக்கை விடுத்தும் சபை நடவக்கைகளை முன்கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டதால் சபாநாயகர் சபை நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.