மக்கள் எழுச்சிக்கு எதிரான ஆயுதரீதியான அடக்குமுறையை கண்டிக்கிறோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ரம்புக்கணையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், ”எமது நாட்டின் ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மை மற்றும் ஊழல் ஆட்சி முறைமை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் நாடு
தழுவிய முழுமையான அரசியல் மாற்றத்தைக்கோரி இன, மத பேதமின்றி ஜனநாயக வழியில் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முழுமையான ஆதரவை நல்குகின்றோம்.
இப்போராட்டங்களின் தொடர்ச்சியாக ரம்புக்கணையில் 19.04.2022 அன்று நடைபெற்ற மக்களின் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் பொலீசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர்
உயிரிழந்து பலர் காயமடைந்த சம்பவத்திற்கு எமது கண்டனங்களை தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை ஆயுத ரீதியாக அடக்க முற்படும் போது அது மேலும் வீரியம் அடைந்து விரிவடையும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் நிறுத்துவதுடன் பக்கச்சார்பற்ற பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். எனினும் எமது நாட்டில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடைபெறும் என்பது கேள்விக்குறியே.
எமது பகுதியில் இவ்வகையான சம்பவங்கள் முன்னைய காலங்களில் நடைபெற்ற போது எமது மக்களுக்காக ஒருவரும் குரல் கொடுக்கவோ அல்லது இது போன்ற பல்வேறு நிறுவனங்கள் அமைப்புகள் கண்டனங்களை தெரிவிக்கவோவில்லை என்பது ஒரு துர்ப்பாக்கியமான வரலாறு ஆகும்.
எனினும் நாம் இச்சம்பவத்திற்கு உரிய நேரத்தில் குரல் கொடுப்பதுடன் தற்பொழுது. அரசாங்கத்துக்கு எதிராக பொது மக்களாலும் பொது அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு போராட்டத்திற்கு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றுள்ளது. என குறிப்பிடப்பட்டுள்ளது.