முழு சுகாதாரத் துறையையும் தனியார்மயமாக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ, நாட்டின் பொருளாதாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதார அமைப்பு விரக்தியில் இருப்பதாக தெரிவித்தார்.
பொருளாதாரத்தை புத்துயிர் பெறவைக்கின்றோம் என்ற போர்வையில் சுகாதாரத்துறையை தனியார்மயமாக்க அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாகத் தெரிவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சுகாதார அமைச்சர்கள் மற்றும் முந்தைய அரசாங்கங்களில்கூட நாட்டின் சுகாதார அமைப்பை அழிக்கும் சதித்திட்டங்கள் இருந்தன என்றும் அவர் கூறினார்.
எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் போர்வையில் சுகாதார அமைப்பை தனியார்மயமாக்க அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாட்டின் சுகாதார அமைப்பை அரசாங்கம் வேண்டுமென்றே சிதைத்துவிட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.