இராணுவத்தை நிறுவியதைக் குறிக்கும் வகையில், பிரமாண்ட இரவு நேர இராணுவ அணிவகுப்பை வடகொரியா நடத்தியுள்ளது.
அணிவகுப்பு உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு தொடங்கியது. இந்த இரவு நேர அணிவகுப்பில் வடக்கின் மிகப்பெரிய மற்றும் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் Hwasong-17 காட்சிப்படுத்தப்பட்டதாக மாநில ஊடகங்கள் தெரிவித்தன.
தலைநகரின் முக்கிய கிம் இல் சுங் சதுக்கம் பரபரப்பாக இருந்ததாகவும், வீதிகள் மூடப்பட்டதாகவும், இரவு நேரத்தில் நகருக்கு மேலே உள்ள வான்பரப்பில் ஒளிரும் பொருட்கள் காணப்பட்டதாகவும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனமொன்று குறிப்பிட்டுள்ளது.
சுமார் 90 நிமிடங்களுக்குப் பிறகு வானவேடிக்கையுடன் அணிவகுப்பு நிறைவடைந்தது.
கிம் இல் சுங் சதுக்கத்தின் குறுக்கே ஏராளமான படைவீரர்கள் அணிவகுத்துச் செல்வதையும், சிலர் போர்ச் சீருடைகளில் அணிவகுத்துச் செல்வதையும், மற்றவர்கள் குதிரைகளில் ஏறிச் செல்வதையும், கிம் வெள்ளை சம்பிரதாய கோட் அணிந்து படை வீரர்களுக்கு உற்சாகமாக கை அசைப்பதையும் அரசு ஊடகங்கள் வெளியிட்ட படங்கள் காட்டுகின்றன.
இதன்போது கருத்து தெரிவித்த வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், ‘எங்கள் நாட்டின் அணுசக்தி திறன்களை மிக வேகமாக வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம். நாட்டின் அணுசக்தி சக்தி அளவு மற்றும் வலுப்படுத்துவதைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
வடக்கின் அணு ஆயுதங்கள் தேசிய சக்தியின் சின்னம். அவை பன்முகப்படுத்தப்பட வேண்டும். கொந்தளிப்பான அரசியல் மற்றும் இராணுவ சூழ்நிலை மற்றும் எதிர்காலத்தில் அனைத்து வகையான நெருக்கடிகளுக்கும் தயாரிப்பில்… நமது அணுசக்தியை அதிகபட்ச வேகத்தில் மேலும் அதிகரிப்போம்.
நாட்டின் அணு ஆயுதங்களின் முதன்மைப் பங்கு ஒரு தடுப்பாக இருந்தாலும், வட கொரியாவின் அடிப்படை நலன்கள் தாக்கப்பட்டால் அவை பயன்படுத்தப்படலாம்’ என கூறினார்.