சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுக்கும் பணி அம்பாறை பொது மயானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
அம்பாறை நீதவான் துஷாக தர்மகீர்த்தி முன்னிலையில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி சஹ்ரான் தலைமையிலான தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலுக்கு இணையாக, சஹ்ரான் ஹாஷிமின் சகோதரரான மொஹமட் ரில்வான், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்தார்.
இதன்போது, சிறுவர்கள் உள்ளடங்களாக 17 பேர் உயிரிழந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், அங்கு இருந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்த மொஹமது ஹஸ்தூன் என்பவரின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரனின் உடற்பாகங்கள் அங்கு காணப்பட்டமை தொடர்பில், DNA பரிசோதனையில் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை மீள தோண்டியெடுத்து பரிசோதனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்கான அனுமதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
இதற்கமைய, தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை அம்பாறை பொது மயானத்திலிருந்து தோண்டியெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.