சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் ஒன்று அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எட்டப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வர்த்தக சம்மேளன கூட்டத்தில் உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்காக, கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன், ஆரம்பநிலை அதாவது, பணிக்குழாம் மட்டத்திலான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முன்னர், இலங்கை அத்தியாவசியமாக நிறைவேற்ற வேண்டியவை என எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டை பூரணப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்பின்னரே, இலங்கையினால் இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டுக் கடன் மீள செலுத்தல் செயற்பாடுகளை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.