ஜூன் முதல் ஓகஸ்ட் வரைக்குமான சிறிய வரவு செலவுத்திட்டம் அல்லது இடைக்கால கணக்கறிக்கை இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விடயம் குறித்து நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிரமம் காரணமாக 2020 ஐ போன்று இடைக்கால கணக்கறிக்கை கொண்டுவர அரசாங்கம் முயற்சி செய்கின்றது.
எவ்வாறாயினும், புதிய வரிவிதிப்பு முறையோ அல்லது வரிச் சீர்திருத்தங்களையோ இடைக்கால கணக்கறிக்கை மூலம் அறிமுகப்படுத்துவதற்கு வழி இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற அனுமதிக்கு உட்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுடன் வரி அதிகரிப்பை நிதி அமைச்சர் முன்மொழிய முடியும்.
கொரோனா தொற்றை அடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், 2020 மார்ச் முதல் மே வரை மூன்று மாத காலத்திற்காக 1224 பில்லியன் ரூபாய்க்கான இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதுவும் போதாதமையை அடுத்து ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, 2020 ஜூன் முதல் ஓகஸ்ட் வரையிலான 1043 பில்லியனுக்கு மற்றொரு சிறிய வரவுசெலவுத்திட்டம் நாடளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.