அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்தும் செய்யும் 15 அமைச்சர்களை உள்ளடக்கிய தேசிய அரசாங்கத்தை அமைக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், இது குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய தரப்பினருக்கு அறிவிக்கப்படும் என்றார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றாலோ அல்லது தோற்கடிக்கப்பட்டாலோ குறைந்தபட்ச வேலைத் திட்டத்துடன் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிவதாக கூறினார்.
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் பொருளாதாரத்தை உறுதி செய்ய முடியாது என்பதனால் தமது முன்மொழிவுகள் உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
மேலும் நியாயமான காரணங்களுக்காக மக்கள் அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறிய சாலிய பீரிஸ், அந்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நடைமுறைப்படுத்த முடியும் என சாலிய பீரிஸ் மேலும் தெரிவித்தார்.