அரசாங்கம் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று (வெள்ளிக்கிழமை) 28ஆவது நாளாகவும் தொடர்கிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாளாந்தம் பல்வேறு தரப்பினரரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று, போராட்டக்களத்திற்கு படகுடன் வந்து ஆதரவு தெரிவித்த மீனவ சங்கப்பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டப் பகுதியில் காணாமலாக்கப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் 6 பேரின் புகைப்படங்களுடன் கூடிய பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
குறித்த பதாதைகள் கடந்த வாரம் பொலிஸாரினால் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெருமளவான ஊடகவியலாளர்கள் குறித்த அறுவருக்கும் மேலதிகமாக 10 பேரின் பதாதைகளுடன் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக ‘மைனா கோ கம’விலும் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்று முன்தினம் கூடாரங்களை அகற்றியிருந்த போதிலும் மீண்டும் அப்பகுதியில் கூடாரங்களை அமைத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.