மேல் மாகாணம் முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு காலிமுகத்திடலில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இது அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
அரசாங்க ஆதரவாளர்களுக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டது.
அத்தோடு, அலரி மாளிகைக்கு முன்பாக உள்ள “மைனா கோ கம” போராட்ட களம் மற்றும் காலி முகத்திடலில் உள்ள ‘கோடா கோ கம’ போராட்டகளம் இரண்டையும் அவர்கள் தகர்த்தெறிந்திருந்தனர்.
இன்று காலை கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்ததை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் காயமடைந்த 23 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.