நாடு தற்போது எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தம்மோடு கைகோர்க்குமாறு ஜே.வி.பிக்கு சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இந்த அழைப்பை விடுத்தார்.
இந்தத் தருணத்தில் தேர்தலுக்குச் செல்வது சாத்தியமற்றது என்பதால், இடைக்காலத்தை அமைக்க ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர், ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுத்தார்.
ஒன்றாக அமர்ந்து, தற்போது இருக்கும் மோசமான நிலையை சரிசெய்து நாட்டை மீட்டெடுத்த பின்னர் எப்போது என்றாலும் தேர்தலை நடத்தலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.