மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம போராட்டத்தின் மீதான நேற்றைய தாக்குதலை திட்டமிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணிகள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
நேற்றைய தினம் தாக்குதல் நடாத்தப்படுமென பொலிஸார் காத்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாகக் குற்றம் சுமத்திய வன்னிநாயக்க, இந்தத் தாக்குதலுக்கு பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவியதாகக் கூறினார்.
எனவே இவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் சட்டத்தரணி வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.