இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ பயணத்தின் போது பங்காளதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். மேலும் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையும் அவருக்கு தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் பங்காளதேஷ் பிரதமருடன் இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் பரஸ்பர நலன்களையும் பகிர்ந்து கொண்டார்.
அத்துடன் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அழைப்பையும் பங்காளதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவிடத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, அமைச்சர் ஜெய்சங்கர், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமனை சந்தித்து, பிரதமர் ஹசீனாவின் வருகைக்கு முன்னதாக, இந்தியாவில் நடைபெறவுள்ள கூட்டு ஆலோசனைக் குழுவின் அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இரு நாடுகளுக்கிடையான ஒத்துழைப்பில் இரு வெளியுறவு அமைச்சர்களும் திருப்தி அடைந்ததோடு மேலும் உறவுகளை வலுப்படுத்துவதற்காக பங்காளதேஷ் பிரதமரின் இந்திய வருகையின் சாத்தியமான தினங்கள் குறித்தும் விவாதித்தனர்.
‘இரு நாடுகளும் நட்பு மற்றும் ஒத்துழைப்பின் உணர்வில் நிலுவையில் உள்ள பல பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் நினைவு கூர்ந்ததோடு, மேலும் டீஸ்டா நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தில் முன்கூட்டியே கையெழுத்திட்டது உட்பட அனைத்து நிலுவையில் உள்ள சிக்கல்களும் விரைவில் தீர்க்கப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.