இந்த ஆண்டு இறுதிக்குள் உக்ரைன் மற்றும் ரஷ்ய போர் முடிவடையும் என உக்ரைன் இராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.
ஸ்கை செய்தி நிறுவனத்திற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
“ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை வீழ்த்த சதி நடக்கின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் போர் முடிவடையும்.
இந்த போரில் ரஷ்யா தோல்வி அடைந்தால், ஜனாதிபதி பதவியில் இருந்து புடின் அகற்றப்படுவார். இதன் மூலம் ரஷ்யா வீழ்ச்சி அடையும். புடின் மிகவும் மோசமான உளவியல் மற்றும் உடல் நிலை பாதிப்பில் இருக்கின்றார்” என கூறினார்.
இதனிடையே, ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கப்படும் என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.
கார்கீவ்வில் இருந்து பின்வாங்கும் ரஷ்யா, தனது வணிக பாதைகளை காப்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் டொனெட்ஸ்க் மீது பல்முனை தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. டொனெட்ஸ்க் நகரம் உக்ரைனின் பொருளாதாரத்திற்கு
முக்கிய பங்கு வகிக்கும் நகரமாக உள்ளது. மேலும் தொழிற்சாலைகள் மற்றும் அறிவியல் துறையின் மையமாகவும் விளங்குகிறது.