அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதாகவும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்படப்போவதாகவும் வெளியான செய்திகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் மறுத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் சுயாதீனமாக செயற்ப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் முகநூல் பதிவின் ஊடாக கபீர் ஹாசிம் அதனை மறுத்துள்ளார்.
அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி 4 நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவை நியாயமானவை மற்றும் மக்களின் குரலுடன் ஒத்துப்போவதால் அவற்றை தானும் ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் அரசாங்கம் முன்வைக்கும் எந்தவொரு பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் தாங்கள் ஆதரவளிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தான் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே அரசியலில் ஈடுபடுவதாகவும் ஆகவே இவ்வாறான செய்திகளை மறுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.