காலி முகத்திடலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பிலான விசாரணைகளுக்காக விசேட அறிக்கையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரினால் விசேட அறிக்கையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் மாத்திரம் 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 22 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மொத்தமாக கைது செய்யப்பட்டவர்களில் 159 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 756 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அதேபோன்று குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 76 பேரின் புகைப்படங்கள் ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில் உள்ளவர்களை கைது செய்வதற்கு உதவி செய்யுமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடந்த 9ஆம் திகதி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
கொழும்பு அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தித்து ஆதரவு தெரிவித்ததன் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன், அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ போராட்ட களம் மற்றும் காலி முகத்திடலில் உள்ள ‘கோடா கோ கம’ போராட்டகளம் இரண்டையும் அவர்கள் தகர்த்தெறிந்திருந்தனர்.
இதனையடுத்து, கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் உட்டபட பொதுமக்களும் இணைந்து எதிர்த்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டிருந்ததுடன், மஹிந்தவின் ஆதரவாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்த பேருந்துகளும் சேதமாக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக ஆர்ப்பாட்டக்காரர்களால் சுமார் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 200 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த பிரதான சந்தேக நபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்பதுக் குறிப்பிடத்தக்கது.