மக்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதன் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இப்போது ஜனாதிபதியின் விலகல் அரசாங்கத்தால் பேசப்படுகிறது, எனவே இந்த அநியாயமான கைதுக்கு எதிராக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் என்ற வகையில் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். கைது செய்யக்கூடாது என பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க தீர்மானித்துள்ளோம்.
தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு மையம் என்ற வகையில் தொழிலாளர் வர்க்கத்தை 18ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக வருமாறு அறிவிக்கின்றோம்” என தெரிவித்தார்.
இதேநேரம், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, “காலிமுகத்திடல் போராட்டத்தில் மட்டுமில்லை திருடர்கள் வேண்டாம், திருடிய பணத்தைத் திரும்பக் கொடுங்கள், திருடர்கள் இல்லாத நாடு, ஊழலற்ற நாடு என ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஒரே குரலில் கூறுகிறார்கள்.
இந்த நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அதிபர்கள், உழைக்கும் மக்கள், நாங்கள் கொழும்புக்கு வருகிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.