வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்களில் பராமரிப்பு மற்றும் சம்பளத்திற்காக இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் 13.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அமர்ந்திருந்தபோது, பிரதமர் அலுவலகம் மூத்த அதிகாரிகளிடம் நேற்று கவலைகளை எழுப்பியதாகவும் இந்தச் செலவுகள் ஏன் உடனடியாகக் குறைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற புள்ளிவிபரங்களின்படி, இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில், பெருமளவிலான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்துகொண்டிருந்த வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்களில் பராமரிப்பு மற்றும் சம்பளத்திற்காக 13.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
இந்த பணிகளுக்கு அந்தந்த நாடுகளில் இருந்து 439 பேர் பணியமர்த்தப்பட்டதாகவும் இலங்கையில் இருந்து 852 பேர் இந்த பணிகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டு தூதரகங்களுக்கு மேலதிகமாக, இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு மொத்தம் 359.8 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்களில் பொருளாதாரக் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் மூன்று தூதரகங்களை மட்டுடே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், அமைச்சகத்தின் செலவுகள் குறித்த விரிவான அறிக்கை தற்போது கோரப்பட்டுள்ளது.