உலகின் மிகப்பெரிய செம்பனை எண்ணெய் (FARMOIL) உற்பத்தி செய்யும் நாடாக இந்தோனேஷியா, ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளது.
இதன்படி, ஏற்றுமதிக்கு எதிர்வரும் 23ஆம் திகதியில் இருந்து தடை விலக்கப்படுவதாக ஜனாதிபதி ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உள்நாட்டில் செம்பனை எண்ணெய் விலை குறைந்துவிட்டது. உள்நாட்டுத் தேவையைவிடவும் அதிகமாக உற்பத்தி உள்ளது. எனவே செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தோனேசியா நீக்குகிறது.
அடுத்து வரும் வாரங்களில் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. செம்பனை எண்ணெய் தொழிலை நம்பி விவசாயிகள் உள்பட 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டில் உள்ளனர். அவர்களின் நலன் கருதி மே 23ஆம் திகதி முதல் செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது’ என கூறினார்.
இந்தோனேசியாவில் தற்போது 60 லட்சம் டன் செம்பனை எண்ணெய் கையிருப்பில் உள்ளதால் ஏற்றுமதிக்கு விதித்த தடையை பரிசீலிக்குமாறு அரசாங்கத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், செம்பனை எண்ணெய் இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளிலும் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது என தெரிகிறது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, உக்ரைன் விவசாய சக்தியின் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து சமீபத்திய வாரங்களில் அதிக விலையை எட்டிய பல முக்கிய உணவுப் பொருட்களில் காய்கறி எண்ணெய்களும் அடங்கும். இதனாலேயே பற்றாக்குறையை கருத்திற்கொண்டு ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா, தடை விதித்தது.
இந்தோனேசியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தாவர எண்ணெயான செம்பனை எண்ணெய், அழகுசாதனப் பொருட்கள் முதல் சாக்லேட் வரை பரவலான பயன்பாடுகளுக்காக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.