ஜேர்மனியின் உயர் நீதிமன்றம், சுகாதாரப் பணியாளர்களுக்கு கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கான ஆணையை அங்கீகரித்துள்ளது.
மார்ச் நடுப்பகுதியில் நடைமுறைக்கு வந்த இந்த நடவடிக்கைக்கு எதிரான புகார்களை நிராகரித்ததாக மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) இதனை அறிவித்தது.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், சுகாதாரப் பணியாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை, அவர்களது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
நோய் பரவல் அபாயம் நிறைந்த மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு, அவர்களது உரிமைகளைவிட மேலானது என்று நீதிபதிகள் கூறினர்.
மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் சுகாதார ஊழியர்களின் உரிமைகளை மீறுவதை விட அதிகமாகும் என்று நீதிமன்றம் கூறியது.
சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக், இந்த தீர்ப்பை வரவேற்றார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
கொரோனா வைரஸின் ஓமிக்ரோன் மாறுபாட்டிலிருந்து அதிக இறப்புகளைத் தடுக்க உதவியது என்று வாதிட்டு, ஆணையை அமுல்படுத்திய சுகாதார வசதிகளுக்கும் லாட்டர்பாக் நன்றி தெரிவித்தார்.
ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், ஆரம்பத்தில் அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி ஆணையை நீடிக்க முன்மொழிந்தார். ஆனால் அத்தகைய திட்டங்கள் சட்டமியற்றுபவர்களால் நிராகரிக்கப்பட்டன.
ஜேர்மனியின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 76 சதவீதம் பேர் கொரோனா வைரஸுக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் பூஸ்டர் அளவைப் பெற்றுள்ளனர்.
தடுப்பூசிக்கான தேவை தற்போது மிகக் குறைவாக உள்ளது. ஆனால் புதிய தடுப்பூசிகளுக்கு அதிக பணம் செலவழிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இது எதிர்காலத்தில் சாத்தியமான மாறுபாடுகளைச் சமாளிக்க நாட்டை அனுமதிக்கும்.