தலைமன்னாரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர்களின் செயற்பாடுகள் அப்பகுதி மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக மண்ணெண்ணைய் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை மீனவர்கள் மண்ணெண்ணையினை பெற்றுக்கொள்வதற்காக தலைமன்னாரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
எனினும் மண்ணெண்ணைய் நிறைவடைந்துள்ளதாக அங்குள்ள ஊழியர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
தலைமன்னாரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர்கள் இன்று காலை 8 மணிக்கு முன்னர் சுமார் 4 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணையினை சில லொறிகளில் வந்தவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அப்பகுதியில் உள்ளவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
தலைமன்னாரில் உள்ள மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்ற நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர்களின் இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
இதேவேளை, குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் நிலைமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்காமல், மக்களை காணொளி எடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையமானது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானது எனவும் கூறப்படுகின்றது.