நாட்டிற்குள் அந்நிய செலாவணியை கொண்டுவரும் வகையில் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கும் திட்டத்தை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘கோல்டன் பரடைஸ் விசா’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டினருக்கு இணைய வழி ஊடாக விசா வழங்கப்படவுள்ளது.
அதன்படி மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் குறைந்தது ஒரு இலட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட காலத்திற்கு விசா வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு வைப்பிலிட்ட பணத்தில் 50 ஆயிரம் டொலரை ஒரு வருடத்திற்கு பின்னர் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மீதமுள்ள 50,000 டொலரை குறைந்தபட்ச இருப்புத் தொகையாக கணக்கில் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் உட்பட அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இந்த விசா வசதியின் பலன்களை அனுபவிக்க முடியும் என்றும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்காக குறைந்தபட்சம் 75,000 டொலர் அல்லது அதற்கு மேல் செலவழிக்கும் வெளிநாட்டவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை வதிவிட விசாக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.