நாடாளாவிய ரீதியாக இன்று மூன்றில் ஒரு பங்கு பேருந்துகளே சேவையில் ஈடுபட்டதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள நிலையில், நாளைய தினம் பேருந்து சேவை இடம்பெறுவதில் நிச்சமயமற்ற தன்மை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகத் தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, டீசல் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாடாவிய ரீதியாவுள்ள அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில்,
மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் பிரிவு சேவையாளர்கள் இன்று அசௌகரியத்திற்கு முகங்கொடுத்திருந்தனர்.
இந்தநிலையில், டீசல் தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.