சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தபோதும், நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் வெற்றிபெற்றுள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 59 சதவீத வாக்குகளை பெற்று பொரிஸ் ஜோன்ஸன் தன் பதவியை தக்க வைத்துள்ளார்.
இருப்பினும், அவருடைய தலைமைத்துவத்திற்கு எதிராக சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்ததால், அவரின் அதிகாரம் வலுவிழந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பொரிஸ் ஜோன்ஸனின் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த மொத்தம் உள்ள 359 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 211 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொரிஸ் ஜோன்ஸனுக்கு ஆதரவாகவும் 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராகவும் வாக்களித்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த பொரிஸ் ஜோன்ஸன், ‘தீர்க்கமான முடிவு. மிகச்சிறந்த திருப்திகரமான முடிவு. ஊடகங்களில் வெளிவரும் அனைத்தையும் கடந்து செல்வதற்கான வாய்ப்பாக இது அமைந்துள்ளது’ என கூறினார்.
2019ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்ற பொரிஸ் ஜோன்ஸன், 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், கொவிட் முடக்கநிலையை மீறி பிறந்த நாள் விருந்தில் கலந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதன்மூலம், பிரித்தானியாவின் பிரதமராக ஆட்சியில் உள்ள ஒருவர் மீது சட்டத்தை மீறியதாக அபராதம் விதிக்கப்படும் முதல் பிரதமராக அவர் ஆனார்.
மேலும், வரி உயர்வு, வாழ்க்கைச் செலவுகள் உயர்வு மற்றும் அரசு கொள்கைகள் மீதும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்தநிலையில் அவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டது.