நாட்டில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளபோதிலும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போதே கருத்து வெளியிட்ட அவர், ”2020 ஆம் ஆண்டு 197 நாட்கள் பாடசாலை செயற்பாடுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கொரோனா பெருந்தொற்றினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால், மேல்மாகாணத்தில் 94 நாட்கள் மட்டுமே பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நடைபெற்றன.
ஏனைய மாகாணங்களில் 117 நாட்கள் நடைபெற்றன. மேல் மாகாணத்திலேயே அதிக நாட்கள் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
2021 ஆம் ஆண்டு 229 நாட்கள் பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் நடைபெற வேண்டிய நிலையில், மேல் மாகாணத்தில் 102 நாட்களே பாடசாலைகளின் செயற்பாடுகள் நடைபெற்றன.
ஏனைய மாகாணங்களில் 143 நாட்கள் நடைபெற்றன. 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவனையின் 23 நாட்களில் 14 நாட்களே பாடசாலைகளின் செயற்பாடுகள் நடைபெற்றன.
2 ஆம் தவனையில் தற்போது 24 நாட்கள் உள்ளன. எனவே, எஞ்சிய தினங்களையும் சேர்த்து ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 44 நாட்கள் பாடசாலையின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
உயர்தரப்பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை கவணத்தில் எடுத்து நாம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
பாடசாலைகளின் கற்றல் செய்றபாடுகள் கடந்த காலங்களில் மூடப்பட்டமையால் தரம் 1- 2 மாணவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டார்கள்.
இன்று நாட்டில் கடுமையான பொருளாதார சிக்கல் நிலைமைக் காணப்படுகிறது. ஆனால், இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் பாதிப்படையும் வகையில் செயற்பட முடியாது.
இதுதொடர்பாக நாம் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளோம். இதில் மாணவர்கள் – ஆசிரியர்கள் நேரம் கடந்து பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும்போது, சீருடையில் பிரச்சினைகளின்போது, மாணவர்கள் காலணிகளை அணியாதபோது சந்தர்ப்பங்களை வழங்குமாறு நாம் கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளோம்.” எனத் தெரிவித்தார்.