உக்ரைனிய தானியங்களை திருடி ரஷ்யா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக, உக்ரைனிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரஷ்யா தனது 600,000 டன் தானியங்களை திருடி அதில் சிலவற்றை ஏற்றுமதி செய்ததாக உக்ரைனிய அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
திருடப்பட்ட உக்ரைனிய கோதுமையை ஆபிரிக்காவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விற்க ரஷ்யா முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுவதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மே மாதத்தின் நடுப்பகுதியில், பெரும்பாலும் ஆபிரிக்காவில் உள்ள 14 நாடுகளுக்கு, ரஷ்ய சரக்குக் கப்பல்கள் உக்ரைனுக்கு அருகே உள்ள துறைமுகங்களில் இருந்து தானியங்களை ஏற்றிச் சென்றதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உக்ரைனில் இருந்து தானியங்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு உக்ரைனில் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், உக்ரைனால் தானியங்களைத் திருடுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
ரஷ்யாவின் கடற்படை, உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை முற்றுகையிட்டதால் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆண்டுதோறும் அனுப்பப்படும் மில்லியன் கணக்கான டன்கள் ஏற்றுமதி முடங்கி போயுள்ளது.
ஆனால், ரஷ்யா, உக்ரைன் கருங்கடல் கரையோரத்தில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றி, தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான வழித்தடங்களை செயற்படுத்த வேண்டுமென கூறுகின்றது.