கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கைகளில் இரத்தம் படிந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மதத் தலைவர்களாலும் தடுக்க முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பான அனுதாப பிரேரணை மீதான உரையின்போதே அவர் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்தப் போராட்டத்தை அமைதியானதாக கருத முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கைகளில் இரத்தம் இருப்பதாகவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மறைந்த அமரகீர்த்தி அத்துகோரள கோட்டா கோ கம போராட்டத்தில் எவ்வித தவறும் செய்யவில்லை என்றும் அப்பாவியான ஒருவரின் உயிரைப் பறித்த இந்தப் போராட்டம் அஹிம்சையான போராட்டமல்ல என்றும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மறைந்த அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலையானது ஜனநாயக ரீதியில் வாழ விரும்பும் மக்கள் மத்தியில் அச்சத்தை தூண்டும் ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.















