வரும் ஓகஸ்ட்,செப்டம்பர் மாதமளவில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடியை நோக்கி தமிழ் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு விகிதமளவுக்கு விழிப்பு ஏற்பட்டிருப்பது சந்தோஷமே.இந்த விடயத்தில் செயல்பூர்வமாக தற்காப்பு நடவடிக்கைகளை தொடக்கி வைத்த கட்சியாக ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தைக் குறிப்பிடலாம்.அக்கட்சியானது, சிறுதானியங்களுக்கு “ராசதானியம்” என்று பெயர் வைத்து, விதைத் தானியங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியது.அதைத் தொடர்ந்து அரச நிர்வாக கட்டமைப்புக்கள் சிலவும், செயற்பாட்டு அமைப்புகளும் தனி நபர்களும் அதுபோன்ற செய்முறைகளை முன்னெடுக்கப்படுகின்றனர். தவிர சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் விவசாய செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு விழிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதுவிடயத்தில் ஏனைய தமிழ் கட்சிகளும் இணைய வேண்டும்.தமிழ் கட்சிகள் இதை ஒரு பொதுப் பிரச்சினையாகக் கருதி இதைக் கையாள்வதற்கு ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.இதன்பொருள் அவர்களை அரசியல் அர்த்தத்தில் ஒற்றுமைப்பட வேண்டும் என்று அப்பாவித்தனமாகவும் குழந்தைத்தனமாகவும் இந்தக் கட்டுரை கேட்கிறது என்பதல்ல. ஒர் இடரை எதிர்கொள்வதற்கு தமிழ் மக்களை எப்படித் தயார்படுத்த வேண்டும் என்ற விடயத்தில் ஒற்றுமைப்பட முடியவில்லை என்றால் மேற்படி கட்சிகள் தங்களுடைய பெயர்களில் தேசியம் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டிருப்பதில் எந்தப் பொருளும் இல்லை. தேசியம் என்பது மக்களைத் திரளாக்குவது. அது ஒரு பொது எதிரிக்கு எதிராக மக்களைத் திரள் ஆக்குவது மட்டும் அல்ல,ஒரு பொது அனர்த்தத்தை எதிர்கொள்ளவும் மக்களைத் திரள் ஆக்குவதுதான்.
உணவு நெருக்கடிக்கான வாய்ப்புக்கள் அதிகமிருப்பதை சந்தை நிலவரங்கள் காட்டுகின்றன.கொழும்பில் உள்ள தொடர்மாடிகள் மற்றும் நெரிசலான குடியிருப்புக்களில் வசிப்பவர்களுக்கு சமூகத்துக்கு பொதுவான சமூகச் சமையல் அறைகளை உருவாக்க வேண்டும் என்று மனோ கணேசன் கேட்டிருந்தார்.கிழக்கில் சில முஸ்லீம் செயற்பாட்டாளர்கள் அதை சில நாட்களுக்குமுன் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள வெளிமாவட்ட பிள்ளைகளுக்கு அவ்வாறு பொதுச் சமையல் அறைகளை உருவாக்குவது தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது என்று ஒரு விரிவுரையாளர் சொன்னார்.மாணவர்களில் ஒரு பகுதியினர் குறைந்தளவு உணவையே உட்கொள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தூர இடங்களில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு பயணச்செலவு பெரும் சுமையாக மாறிருக்கிறது.யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதி,வடமராட்சி, தென்மராட்சி போன்ற இடங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் பயணம் செய்யும் பிள்ளைகளுக்கு பயணச் செலவு தாங்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
சந்தையில் மரக்கறிகளின் விலை கூடிக்கொண்டே போகிறது. இது காற்று வீசும் காலம். செத்தல் தேங்காய்கள் தாமாகக் கழண்டு விழும். தேங்காயின் விலை குறைய வேண்டிய ஒரு காலம்.ஆனால் தேங்காய் எண்ணையின் விலை எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு குறையவில்லை.ஒரு லீட்டர் தேங்காய் எண்ணெய் 700 ரூபாய்க்கு மேல் போகிறது. உள்ளூர் நிலவரஙகளின்படி காற்று வீசும் காலங்களில் தேங்காய் எண்ணையின் விலையும் குறைய வேண்டும். ஆனால் வியாபாரிகள் மரக்கறி எண்ணையின் விலையோடு ஒப்பிட்டு தேங்காய் எண்ணெயின் விலையை ஒரு கட்டத்துக்கு கீழ் குறைய விடுகிறார்கள் இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு வருகிறது.
உலகம் முழுவதிலும் எதிர்பார்க்கப்படும் உணவுத்தட்டுப்பாடு காரணமாக மரக்கறி எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான இந்தோனேசியா போன்ற நாடுகள் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளன. இதனால் மரக்கறி எண்ணையின் விலை சந்தையில் குறைவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. எனவே மரக்கறி எண்ணையின் விலையோடு சேர்த்து தேங்காய் எண்ணெயின் விலையையும் இறங்கவிடாமல் வியாபாரிகள் செயற்கையாக விலை உயர்வைப் பேணி வருவதாக பாவனையாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
கோதுமை மாவின் விலையும் ஏறிக்கொண்டே போகிறது. மட்டுமல்ல கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று தெரிகிறது. இந்தியா கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்தி இருக்கிறது. உக்ரைன் போர் காரணமாக ஏற்கனவே கோதுமை மாவின் வரத்துக் குறைந்துவிட்டது. எனவே எதிர்காலத்தில் கோதுமை மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம்.
அரிசியின் விலை ஏற்கனவே உயரத் தொடங்கிவிட்டது. சில நாட்களுக்கு முன் அரசாங்கம் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை அறிவித்தது. ஆனால் கடந்த பல மாதகால பொருளாதார நெருக்கடியின்போது யாராலும் விலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை நிலையாகும். இந்தியாவிடமிருந்து அரசாங்கம் கடனாகப் பெற உத்தேசித்துள்ள உரம் இப்போதைக்கு வந்து சேராது என்றே தெரிகிறது. ஒரு மூத்த விவசாயி சொன்னார் அது ஒரு கற்பனை என்று. உள்ளூரில் கள்ளச்சந்தையில் தான் 45000 ரூபாய்க்கு உரப்பை ஒன்றை வாங்கியதாக சொன்னார். இப்பொழுது ஒரு நெல் மூட்டை பத்தாயிரம் வரை போகிறது. எதிர்காலத்தில் நெல் மூட்டையின் விலை மேலும் பல மடங்காக உயரலாம் என்றும் அவர் அனுமானிக்கிறார்.
அதாவது எதிர்பார்க்கப்படும் உணவுத்தட்டுப்பாடு ஒன்றுக்கான வாய்ப்புக்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றன. ரணில் விக்ரமசிங்க பொருட் கையிருப்பு தொடர்பாகவும் பொருட் தட்டுப்பாடு தொடர்பாகவும் முன்னறிவித்து வருகிறார். ஆனால் அமைச்சர்கள் இதோ பொருள் வருகிறது,இதோ உரம் வருகின்றது,கையிருப்பில் உள்ள அரிசி நாட்டின் நுகர்வுக்கு போதும் என்றெல்லாம் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஓர் அரசாங்கத்துக்கு உள்ளேயே பிரதமர் ஒன்றைக் கூறுகிறார்,அமைச்சர்கள் வேறொன்றைக் கூறுகிறார்கள்.அதாவது அரசாங்கம் ஸ்திரமாக இல்லை என்பதை அது காட்டுகிறது.
எனவே உரம் வரும்.விலை இறங்கும் என்றெல்லாம் தங்களுடைய கையை மீறிய விவகாரங்களில் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, தமிழ் மக்கள் தங்கள் கைகளால் எப்படி எதிர்காலத்தை பாதுகாக்கலாம் என்று சிந்திப்பதே நல்லது. அது கடினமான விஷயம்தான். ஆனால் போர்க் காலங்களில் அவ்வாறு மிகக் கடினமான,மிகப் பயங்கரமான,நிச்சயமற்ற நாட்களை தமிழ் மக்கள் எதிர் கொண்டிருக்கிறார்கள். வெற்றி பெற்றிருக்கிறார்கள். போர்க்காலங்களில் தமிழ் மக்களுக்கு இருந்த ஒரு சாதகமான அம்சம் பதுக்கல் இருக்கவில்லை என்பது.இப்பொழுதிருக்கும் பெரிய பிரச்சினையே பதுக்கல்தான்.இந்த விடயத்தில் வியாபாரிகள் ஈவிரக்கமின்றி நடந்து கொள்வதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.
ஒருபுறம்,இரக்கமற்ற பதுக்கல்.இன்னொருபுறம் புத்திசாலித்தனமற்ற, வினைத்திறனற்ற வினியோகம்.அண்மையில் முகநூலில் ஒரு நண்பர் எழுதியதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்…
எரிபொருளை வாங்குவதற்காக மிக நீண்ட வரிசைகள் வீதியோரங்களில் நிற்கின்றன. இந்த நீண்ட வரிசைகள் காரணமாக முதலாவதாக தெருக்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இரண்டாவதாக சாரதிகள் ஒரு நாளின் மிக நீண்ட நேரத்தை தெருவோரம் காத்திருப்பதில் கழிக்கிறார்கள்.இந்த நெருக்கடிக்குத் தீர்வுகாண மேற்படி நண்பர் முகநூலில் ஓர் ஆலோசனையைத் தெரிவித்திருந்தார்.எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களின் இலக்கங்களை பதிந்தபின் குறிப்பிட்ட ஒரு தொகுதி வாகனங்களை இந்த நேரத்துக்கு வாருங்கள் என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை கொடுத்து விட்டால் அவர்கள் அந்த நேரத்துக்கு வந்து எரிபொருளை நிரப்பிக் கொண்டு போவார்கள்.இதன்மூலம் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதை தவிர்க்கலாம், ஒரு நாளின் மிக நீண்ட உழைக்கும் நேரம் வீணாவதைத் தடுக்கலாம் என்று.
மற்றொரு நண்பர் கூறினார்…. மண்ணெண்ணெய் தேவையாக இருக்கும் மீனவ கிராமங்கள்,விவசாய கிராமங்கள் போன்றவற்றை நோக்கி மண்ணெண்ணையை கொண்டு போகலாம்.எரிபொருள் விற்பனை நிலையங்களில் அவற்றை விற்பதற்கு பதிலாக,கிராமங்களுக்கு பவுசர்களை கொண்டு சென்று அங்கே இருக்கக்கூடிய அரச மற்றும் விவசாயக் கட்டமைப்புகளின் உதவியோடு அல்லது கூட்டுறவுக் கிளைகளூடாக மண்ணெண்ணெய் விநியோகத்தை செய்யலாம் என்று.இந்த விடயத்தில் ஏற்கனவே இருக்கின்ற அரச வளங்களை பயன்படுத்தலாம். ஏற்கனவே சமூகத்தில் காணப்படும் குடிமக்கள் கட்டமைப்புகளை பயன்படுத்தலாம். அதாவது தெளிவாகச் சொன்னால் இந்த விடயத்தில் அரச உயரதிகாரிகள் புத்திசாலித்தனமாகத் திட்டமிடலாம் என்று பொருள்.
அனர்த்தம் என்பது இயற்கை அனர்த்தங்கள் மட்டுமல்ல. பொருளாதார அனர்த்தங்களும்தான்.எனவே அனர்த்த முகாமைத்துவத்திற்குரிய அரச கட்டமைப்புகளை பொருத்தமான விதங்களில் புத்திசாலித்தனமாக, சமயோசிதமாக, கள நிலைமைகளுக்கு ஏற்ப செயல்படுத்தலாம். இதை யார் சிந்திப்பது ?யார் அமுல்படுத்துவது?
அரசாங்கம் எதையாவது செய்யும் அல்லது எதையாவது தரும் என்று எதிர்பார்ப்பதை விடவும் மக்கள் தங்களால் இயன்ற தற்காப்பு முயற்சிகளில் ஈடுபடுவதே பொருத்தமானது.பெருந்தொற்று நோய்ச்சூழலில் தமிழ் கட்சிகளின் இயலாமையை தமிழ்மக்கள் கண்டார்கள்.நிவாரணம் வழங்குவதற்குமப்பால் மக்களை ஒரு திரளாக திரட்டும் செயல் திட்டம் எதுவும் அக்கட்சிகளிடம் இருக்கவில்லை. இப்பொழுதும் அதே நிலைமைதான். சில கட்சிகள் அறிக்கை விடுகின்றன.அதற்கும் அப்பால் மக்கள்மைய செயற்பாடுகளில் இறங்குவதாக தெரியவில்லை. இன்னும் ஆழமான பொருளில் சொன்னால் மக்களை ஒரு திரளாகக் கூட்டிக் கட்டி ஒரு நெருக்கடியை எதிர் கொள்ளும் முற்காப்பு வேலைகளில் ஈடுபட பெரிய கட்சிகள் தயாராக இல்லை.
நிவாரணம் கொடுப்பது,நாடாளுமன்றத்தில் முழங்குவது,அறிக்கைகளை விடுவது மட்டும் போதாது. அதற்கும் அப்பால் செல்ல வேண்டும்.
நெருக்கடியான காலங்களில் மக்களோடு நிற்கும் கட்சிகளை மக்கள் எப்பொழுதும் நேசிப்பார்கள்.துன்பமான நேரங்களில் தோள் கொடுக்கும் கட்சிதான் மக்களின் இதயத்தில் என்றென்றும் நிறைந்திருக்கும்.இப்படிப் பார்த்தால் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக மக்களை உஷார்படுத்தும் வேலைகளில் தமிழ் கட்சிகள் இறங்க வேண்டும்.
புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் அதற்கு உதவ தயாராக காணப்படுகிறது. ஏற்கனவே உதவிகள் கிடைக்க தொடங்கிவிட்டன.அந்த உதவிகள் ஒரு மையத்தில் இணைக்கப்பட வேண்டும்.பொதுவான புள்ளிவிவரங்களும் பொதுவான திட்டமிடலும் வேண்டும். பெருந் தொற்று நோய்க் காலத்தில் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் பெருமெடுப்பில் உதவியது. தனிப்பட்ட முறையிலும் குழுக்களாகவும் அமைப்புக்களாகவும் உதவிகள் தாயகத்தை நோக்கி வந்தன.ஆனால் அந்த உதவிகள் ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்படவில்லை. யாருக்கு என்ன வேண்டும் என்ற புள்ளி விபரங்களும் ஒரு மையத்தில் தொகுக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் ஒருவருக்கு பல நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் அல்லது பல கட்சிகள் உதவிகளை வழங்கின.எனக்கு தெரிந்து பல வீடுகளில் அவ்வாறு வழங்கப்பட்ட சில உலருணவுகள் வண்டுபிடித்து பழுதாகி விட்டன.
அதற்கு அடிப்படைக் காரணம் ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்படாமைதான். ஒரு நெருக்கடியான சூழலில் புலம் பெயர்ந்த தமிழர்கள் எப்படியெல்லாம் உதவ முடியும் என்பதற்கு பெருந்தொற்றுநோய் காலம் ஒரு உதாரணமாகும். இப்பொழுது உணவு நெருக்கடியின் போதும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் உதவியை ஒரு மையத்திலிருந்து திட்டமிடலாம்.தமிழ் கட்சிகளும் அமைப்புகளும் குடிமக்கள் சமூகங்களும் இணைந்து பட்டினியை அல்லது உணவு நெருக்கடியை எதிர்கொள்ளத் தேவையான தயாரிப்புகளை திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்கினால் என்ன? தேச நிர்மாணம் என்பது மெய்யான பொருளில் அதுதானே?