கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது குழந்தைகள் மத்தியில் வேகமாக பரவி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காய்ச்சல், உடல்வலி, இருமல், சளி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னர், சளியானது கொரோனாவுடன் தொடர்புடையதாக இருந்த போதிலும், தற்போது பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் மத்தியில் இது எளிதில் பரவக்கூடியது என்பதால், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தவறாமல் கைகளை கழுவ வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக வகுப்பறைகள், முன்பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போது முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காய்ச்சலைக் குறைக்க வெதுவெதுப்பான நீரை பயன்படுத்த முடியும் எனவும் குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும், எவராவது சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்கள் மருத்துவர்களின் உதவியை நாட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.