சீனாவின் மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் நடந்ததாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் குறித்து பல நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.
மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அங்குள்ள நிலைமை குறித்து அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதேவேளை ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான நெதர்லாந்து தூதர் பால் பெக்கர்ஸ் செவ்வாயன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகளின் சார்பாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்.
அதில் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தில் மனித உரிமைகள் நிலைமை குறித்து தாங்கள் தொடர்ந்து கவலை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்களும் மற்ற முஸ்லீம் சிறுபான்மையினரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பகமான அறிக்கைகளை மேற்கோளிட்டு குறிப்பிட்டுள்ளார்.
சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை அல்லது தண்டனை, கட்டாய கருத்தடை, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, குழந்தைகளை கட்டாயமாகப் பிரித்தல் போன்ற சம்பவங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.