புதிய பிரதமரை நியமித்து ஒரு மாதத்துக்கும் மேலாகியும் தற்போதைய நெருக்கடிக்கு உரிய பதில் கிடைக்காததால் நாடாளுமன்றத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பேச்சாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தனது அதிகாரங்களைப் பயன்படுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் நெருக்கடி ஏற்பட்டு சில மாதங்களுக்குப் பின்னர், நாடாளுமன்றம் கூடியது.
நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்கள் எதுவும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவவில்லை. மக்களின் குரலை அல்லது நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தாத இடமாக நாடாளுமன்றம் மாறியுள்ளது.
ஜனாதிபதியும் தற்போதைய பிரதமரும் இரகசியமாக அரசாங்கத்தை அமைத்தனர்.
புதிய பிரதமர் பதவியேற்று ஒன்றரை மாதம் நிறைவடைந்துவிட்டது. நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக, நெருக்கடியின் செய்தித் தொடர்பாளராக ரணில் மாறியுள்ளார்.
இந்த அரசை மக்கள் நம்புகிறார்களா? இந்தப் பிரச்சினைகளில் ஏதேனும் அல்லது அனைத்தும் தீர்க்கப்படும் என்று நம்புகிறீர்களா? இவ்வாறிருக்க, பிரதமரும் அவரது அமைச்சரவையும் அவர் கொண்டு வந்த அரசாங்கமும் மிகக் குறுகிய காலத்தில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியாது என்பதை இன்று நிரூபித்துள்ளது.
எனவே, இந்த நாடாளுமன்றத்தில் நேரத்தை வீணடிப்பதன் மூலம் எண்ணெய் வரிசையில் நிற்கும் நபருக்கு பதில் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. பால் இல்லாதவர்களுக்கு பதில் இல்லை. அப்படியென்றால் நாடாளுமன்றத்தில் திட்டவட்டமான யோசனையை முன்வைக்காமல் அரசாங்கம் இந்த நெருக்கடியிலிருந்து எப்படி மீள்வது? இந்த நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது? என இந்த அரசாங்கம் மிகக் குறுகிய காலத்தில் ஒரு நிகழ்ச்சி நிரலை முன்வைக்க வேண்டும்.
எனவே, இவ்வாறானதொரு நிகழ்ச்சி நிரலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இவ்வாறான விவாதங்களை நடத்துவதில் அர்த்தமில்லை.
எனவே இந்த வாரம் நாடாளுமன்றத்தை புறக்கணிக்க அனைவரும் தீர்மானித்துள்ளோம். அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.