நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலய அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்று, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அதிகாரிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாத காரணத்தால் அலுவலகத்தை ஒரு வார காலத்திற்கு மூட வேண்டியுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.
வியன்னா உடன்படிக்கையின்படி, வெளிநாட்டு தூதரகங்கள் சரியாகச் செயல்படுவதை அந்த நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.
இந்தநிலையில் தற்போது தூதரகங்கள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால் இலங்கை சர்வதேச சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்படும் வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகின்றது.
எனவே இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரதும் கோரிக்கையாக உள்ளது.