உக்ரைன் மீதான முழு இராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘தங்களது நிபந்தனைகளை உக்ரைன் உடனடியாக ஏற்காவிட்டால் மிக மோசமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
உக்ரைனில் விவகாரத்தைப் பொருத்தவரை மேற்கத்திய நாடுகள் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்க்கும் செயலில் ஈடுபடுகின்றன. உக்ரைன் அரசாங்கதைத் தூண்டிவிட்டு, கடைசி உக்ரைனியர் சாகும்வரை அந்த நாடு போரிட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.
இதில் மிகப் பெரிய சோகம் என்னவென்றால், மேற்கத்திய நாடுகளின் பேச்சைக் கேட்டு உக்ரைனும் அந்த திசையை நோக்கித்தான் நகர்ந்துகொண்டிருக்கிறது.
உண்மையில், உக்ரைன் மீதான முழுமையான நடவடிக்கைகளை ரஷ்யா இன்னும் தொடங்கவே இல்லை. தற்போது நடைபெறும் தாக்குதல்கள் எல்லாம் மிகவும் மிதமானவை.
எனவே, ரஷ்யாவின் நிபந்தனைகளை உக்ரைன் விரைவில் ஏற்பதுதான் அந்த நாட்டுக்கு நல்லது. இல்லையென்றால், மிக மோசமான விளைவுகளுக்காக உக்ரைன் தன்னை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.
உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ராஜீய ரீதியில் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், உக்ரைனோ, போர்க்களத்தில் ரஷ்யாவை வீழ்த்திவிடப்போவதாக கூறி வருகிறது. அதனை அவர்கள் முயற்சித்துப் பார்க்கடும்’ என கூறினார்.