பீஜிங்கின் விண்வெளித்திட்டமானது ‘ஒரு இராணுவ விண்வெளித் திட்டம்’ என அமெரிக்க விண்வெளி முகவரகத்தின் நிர்வாகி பில் நெல்சன் கூறியதைத் தொடர்ந்து, சீனா கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நாசா உண்மைகளை புறக்கணித்து சீனாவை கொச்சைப்படுத்துவது இது முதல் முறை அல்ல என்று கூறினார்.
சில அமெரிக்க அதிகாரிகள், ஏனைய நாடுகளின் இயல்பான மற்றும் நியாயமான விண்வெளிச் செயற்பாடுகளை தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் அவதூறு செய்து வருவதாகவும், இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க விண்வெளித் துறையின் இயக்குநரான நெல்சன், அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் இருண்ட வரலாறு, விண்வெளி குப்பைகளை உருவாக்குவதில் அமெரிக்கா ஆற்றிய பங்கு, விண்வெளியில் ஆயுதப் போட்டிகளைத் தூண்டுதல் மற்றும் உலகளாவிய ரீதியில் மூலோபய ஸ்திரத்தன்மைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்கா விண்வெளியை ஒரு போர் களமாக வெளிப்படையாக வரையறுத்துள்ளது, விண்வெளிப் படையின் உருவாக்கத்தை துரிதப்படுத்தியது.
தாக்குதல் விண்வெளி ஆயுதங்களை உருவாக்கி பயன்படுத்தியது, மேலும் விண்வெளிக் கட்டுப்பாடு குறித்த சட்ட ஆவணங்களின் பேச்சுவார்த்தையை நீண்டகாலமாக செயலற்ற முறையில் எதிர்க்கிறது.
அதன் நட்பு நாடுகளுடன் விண்வெளி இராணுவ ஒத்துழைப்பை தொடர்ந்து பலப்படுத்தியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா விண்வெளி ஒத்துழைப்பில் தடைகளை அமைத்துள்ளது, ஏனைய நாடுகளின் விண்வெளி நிறுவனங்களை தன்னிச்சையாக தடுத்து வருவதோடு சீனாவின் விண்வெளி ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களை கட்டுப்படுத்த சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்துவதை சீனா ஆதரிக்கிறது, விண்வெளியில் ஆயுதப் போட்டியை எதிர்க்கிறது, மேலும் விண்வெளியில் பகிரப்பட்ட எதிர்காலத்துடன் ஒரு சமூகத்தை கட்டமைக்க அழைப்பு விடுக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் விண்வெளி ஆய்வுகள் நாட்டின் பொருளாதாரம், சமூகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும் என்று வலியுறுத்திய அவர், சீன விண்வெளித்துறையின் வளர்ச்சி சுயாதீனமாக அடையப்படுகிறது, மேலும் அதன் உரிமைகள் மற்றும் சாதனைகள் கேள்விக்குட்படுத்தப்படவோ அல்லது களங்கப்படுத்தப்படவோ முடியாது என்றும் காட்டமாகக் கூறினார்.
‘அமெரிக்க அதிகாரி ஒரு பெரிய நாட்டின் பொறுப்புகளைக் கொண்டிருப்பவர் என்ற வகையில் விண்வெளியில் அமெரிக்க தரப்பின் எதிர்மறையான வார்த்தைகள் மற்றும் செயல்களை தீவிரமாக மதிப்பாய்வு செய்து அவற்றைச் சரிசெய்து, விண்வெளியில் நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கு உரிய பங்களிப்பைச் செய்ய வேண்டும்’ என்று ஜாவோ கூறினார்.
முன்னதாக, பில் நெல்சன், சீனா தனது இராணுவ விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாக சந்திரனைக் கைப்பற்றுவது பற்றி சிந்திக்கக்கூடும் என்று கூறினார்.
தற்போது, சீனாவுடன் அமெரிக்கா விண்வெளிக்கான புதிய பந்தயத்தில் ஈடுபட்டுள்ளது. 2035 ஆம் ஆண்டில், பீஜிங் தனது சொந்த நிலவு நிலையத்தின் கட்டுமானத்தை நிறைவுசெய்து, ஒரு வருடம் கழித்து சோதனைகளைத் தொடங்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.
நிலவில் சீனா இறங்குவதைப் பற்றி நாம் மிகவும் கவலைப்பட வேண்டும் என்றும், சீனா களமிறங்கினால் அது மக்கள் குடியரசிற்குச் சொந்தமானதாகிவிடும் என்றும், மற்றவர்கள் அனைவரும் வெளியே இருக்க வேண்டும் என்றும் நெல்சன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.