இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் ஒரு முக்கிய அம்சமாக நாளொன்றுக்கான முழுமையான மின்சாரத்தேவையை வழங்க முடியாத பலவீனமான நிலைமைகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன.
இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மின்சார உற்பத்திப் பற்றாக்குறையானது, உற்பத்திகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளையும் வெகுவாகப் பாதித்துள்ளது.
இது ஏற்கனவே நலிவடைந்த பொருளாதாரத்தை மேலும் மோசமான நிலைக்கு தள்ளிவிடுவதாகவே இருக்கப்போகின்றது.
இலங்கையில் தற்போதைய மின் தட்டுப்பாடுக்கு பல வருடங்களாக் குறுகிய நோக்கத்துடன் ஏதேச்சதிகாரமாகவும், குறுகிய சிந்தனைகளுடனும் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாகவே எனக்கொள்ள வேண்டியுள்ளது.
குறிப்பாக அரசுக்கு சொந்தமான இலங்கை மின்சார சபையின் அனைத்து சீர்திருத்த முயற்சிகளும் தோல்வி கண்டுவிட்டன.
இலங்கையின் தற்போதைய மின்சார தேவையானது உச்சபட்சமாக 2,600 மெஹாவாற்றாக உள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் நாட்டில் 4,000 மெஹாவாற்றுகளுக்கு மேல் உற்பத்தித் திறன் இருந்த போதிலும் சுமார் 2,300 மெஹாவாற்றுக்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது.
நுரைச்சோலையில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நிலக்கரி மூலம் இயங்கும் லக்விஜய கட்டமைப்பானது, அடிக்கடி பழுதடைந்து மின்சாரத் துறையின் சீரான மின்வழங்கலுக்கு தடையாக அமைந்துள்ளது.
இப்போதும் கூட, லக்விஜய சுமார் 500 மெஹாவாற்றை மட்டுமே உற்பத்தி செய்து வருகிறது. இது 900 மெஹாவாற்றுக்கும் அதிகமான அதன் உரிமைக் கொள்ளளவிற்கு மிகவும் குறைவாக உள்ளது.
எனவே, இலங்கை தற்போது கிட்டத்தட்ட 700 மெஹாவாற் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக இலங்கை எந்த புதிய தலைமுறைத் திறனையும் உள்ளீர்ப்பதற்குத் தவறியமையால் சவால்களை மேலும் மோசமாக்கியுள்ளது.
இந்நிலையில், மின்உற்பத்தியாளர்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்வதன் மூலம், தொடரும் தட்டுப்பாட்டினால், இலங்கை மின்சார சபை உள்ளிட்டவை பலனடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்போது நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தின் பெரும்பகுதி திரவ எரிபொருளில் இயங்கும் கட்டமைப்பால் உருவாக்கப்படுகிறது இதனால் அது விலை உயர்ந்ததாக உள்ளது.
தற்போதைய நிலையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உள்ள எந்தவொரு புதிய மின் திட்டங்களுக்கும் ஏற்படவில்லை.
இந்த நிலை தொடர முடியாது என்பதை நாட்டின் தலைவர்களும் நிபுணர்களும் உணர வேண்டிய நேரம் இதுவாகும்.
தற்போது நெருக்கடிகள் இருக்கின்ற நிலையில், இவ்வாறான தவறுகளை நிவர்த்தி செய்வதற்கும் எதிர்காலத்தில் அவை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நவீன சமுதாயத்தில் வளர்ச்சி
முன்னோக்கி பார்க்கக்கூடிய, தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான மற்றும் மலிவு விலையில் தீர்வுகளை நோக்கி நகர்வதற்கு இலங்கைக்கு வலுவான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளைத் தணிப்பதில் இலகுவாகச் செயற்படுத்தக்கூடிய மற்றும் நீண்ட தூரம் செல்லக்கூடிய தீர்வு முன்மொழிவொன்று காணப்படுகின்றது.
குறிப்பாக, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மின் இணைப்புகளை நிறுவுவதற்கான முன்மொழிவாகும். இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக விவாதத்தில் உள்ளது. நிறைவுக்கு வந்துள்ள இந்த திட்டத்தினை முன்னெடுப்பதற்கான சாகமான நிலைமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது மட்டுமல்லாமல், அதற்கு நிதியளிக்கவும் இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக தகவல்கள் உள்ளன.
அதன்மூலம், இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்காலிக மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், இந்த திட்டத்தின் முக்கிய பயனாளியாக இலங்கையாகவே உள்ளது.
அதுமட்டுமன்றி, இத்திட்டத்தின் ஊடாக, இலங்கை தனக்கு உபரியாகவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை ஈட்ட முடியும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல், குறிப்பாக இலங்கையின் வடக்கு கடற்பகுதிகளில் முழுமையாக அபிவிருத்தி அடைந்தவுடன் நாட்டின் தேவைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.
எனவே, பெரிய எரிசக்தித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்த சக்திக்கான மிகவும் இயற்கையான ஏற்றுமதி இடமாக இந்தியா இருக்கும்.
இந்தியாவுடன் மின்சாரக்கட்டமைப்பு இணைப்புகளை நிறுவியுள்ள நேபாளம், பூடான் மற்றும் பங்களாதேஷ் போன்றவை ஏற்கனவே பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேசமான நிலையில் உள்ள இலங்கை, இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் இயற்கையான ஒற்றுமையைப் பயன்படுத்துவதற்கு உரிய நேரம் இதுவாகும்.
நாட்டின் கடன்களை ஒப்பிடும்போது, அவற்றை மீளச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக நீண்ட காலத்திற்கு மின் கட்டமைப்புக்களில் முதலீட்டு செய்யும் வகையில் இருநாடுகளுக்கு இடையிலான இணைப்பு நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அந்த வகையில், இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.