பொதுமக்களை ஒடுக்கும் இராணுவ அதிகாரிகளையே அரசாங்கம் நம்பியுள்ளது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
போராட்டக்கார்களுடன் கலந்துரையாடிய இராணுவ அதிகாரி பணி இடை நீக்கப்பட்டமை தொடர்பாக கொழும்பில் நேற்று இடமபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மக்களை அடக்கும் அதிகாரிகளே அரசாங்கத்திற்கு தேவை என்பதையே இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தின் முன்பாக கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை சமாதானப்படுத்த பிரிகேடியர் அனில் சோமவீர முயற்சித்ததாகவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைதியை நிலைநாட்ட பாடுபடும் அதிகாரிகள் மீது அரசாங்கம் அக்கறை காட்டாமல் அவர்களை இடைநிறுத்துவதாக லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டினார்.
மேலும் தற்போதைய அரசாங்கம் பொதுமக்களுக்கு எதிரான அடக்குமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
இதேவேளை, பிரிகேடியர் அனில் சோமவீர பணி இடைநிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்றும் அவர் வேறொரு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.