பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று வாக்குப் பதிவிலும் முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்தார்.
நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று வாக்குப் பதிவில், ரிஷி சுனக்கு அவருக்கு ஆதரவாக 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி மார்டன்ட் 82 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் 71 வாக்குகள் பெற்று மூன்றாமிடமும், சமூகநலத் துறை அமைச்சர் கெமி பேடனாக் 58 வாக்குகள் பெற்று நான்காவது இடமும் பிடித்தனர்.
கடைசி இடம் பெற்ற வெளிவிவகாரங்களுக்கான சிறப்புக் குழுத் தலைவர் டாம் டுகென்தாட் போட்டியிலிருந்து வெளியேறினார்.
இதன்மூலம் பிரதமர் பதவிக்கான போட்டியாளர்களின் எண்ணிக்கை 4ஆக குறைந்துள்ளது. அடுத்த சுற்று வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 19ஆம் திகதி) நடைபெறும்.
இறுதி இரு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர். இறுதிச் சுற்றில் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிப்பர். அதில் வெற்றி பெறுபவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதிய பிரதமராக செப்டம்பர் 5ஆம் திகதி பதவியேற்பார்.