ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
அதன்படி, காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில் அவசர நிலை பிரகடனம் மீதான விவாதம் நடைபெற்றுவருகின்றது.
இதற்கிடையில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இன்றைய நாடாளுமன்ற கூட்டத்திற்கு கட்டாயம் வருகை தர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தை ஒரு மாதம் நீடிக்கும் திட்டத்தை நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு அவர் நியமிக்கப்பட்டார்.