தான் அமைச்சு பதவியினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக வெளியான தகவல்களை ஹர்ஷ டி சில்வா நிராகரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த இருவருக்கும் என்ன அமைச்சுகளை வழங்குவது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹர்ஷ டி சில்வாவிற்கு நிதியமைச்சையும், சரத் பொன்சேகாவுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சையும் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
சர்வகட்சி அரசாங்கத்தின் கீழ் இந்த பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையிலேயே குறித்த தகவல்களை ஹர்ஷ டி சில்வா முற்றாக நிராகரித்துள்ளார்.
அத்துடன், இதுதொடர்பில் தான் யாருடனும், எவ்விதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.